துணை ராணுவ வீரர்கள் குடும்பங்களை மோடி அரசு பாதுகாக்கும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

புதுடெல்லி: சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா டெல்லி லோதி சாலையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: மத்திய பாதுகாப்பு படைப் பிரிவுகளில் ஒன்றான சிஆர்பிஎப்.பின் அதிரடிப் படை, கோப்ரா படை, மருத்துவம், பயிற்சி, தொலைத்தொடர்பு உள்பட அனைத்து பிரிவுகளும் போதிய இடமின்மை காரணமாக பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய தலைமை அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2.33 ஏக்கர் பரப்பளவில் ரூ. 277 கோடி மதிப்பீட்டில் இதன் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் உள்பட 12 மாடி கட்டிடமாக உருவாக்கப்படும் இதன் கட்டுமான பணிகள் 2022ம் ஆண்டிற்குள் முடிவடையும் என பொதுப்பணித் துறை உறுதி அளித்துள்ளது. இந்த புதிய அலுவலகம் உள்ளரங்கம், கூட்ட அரங்கு, துணைநிலை ஊழியர்களுக்கான குடியிருப்பு, கேன்டீன், உடற்பயிற்சி கூடம், விருந்தினர் மாளிகை, சமையலறை, கார், பேருந்து நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. ஏனெனில், நாட்டை பாதுகாக்கும் மத்திய பாதுகாப்பு படையினரின் குடும்பங்களை பாதுகாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது.

ஒவ்வொரு துணை ராணுவ வீரரும் தங்கள் குடும்பத்தினருடன் 100 நாட்கள் செலவிடுவதை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விரைவில் இதற்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், விஐபிக்களுக்கான மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு பிரிவுக்கான பிரத்யேக முத்திரையையும் அமித்ஷா வெளியிட்டார். புதிய முத்திரையில் கருடனுடன் வாள், கேடயம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘எப்போதும், விழிப்புடன், எச்சரிக்கையுடன்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

Related Stories: