வேலூர்: வேலூர் மாவட்ட மலைவாழ் மக்கள் சேகரிக்கும் உணவு பொருட்களை பதப்படுத்த ரூ.25.95 லட்சம் மதிப்பில் சோலார் உலர் கலன்கள் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் ஜம்னாமரத்தூரை ஒட்டியுள்ள பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் வனப்பகுதிகளில் கிடைக்கும் இயற்கையான உணவு பொருட்களை சேகரித்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், உணவு பொருட்களை பதப்படுத்துவதற்கு குளிர்சாதன கிடங்கு வசதி மலைவாழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், உணவுப் பொருட்கள் ஒரு சில நாட்களிலேயே கெட்டுவிடுகிறது. எனவே, வேலூர் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு உணவு பொருட்களை பயன்படுத்துவதற்காக சோலார் உலர் கலன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த உலர் கலனை நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பார்வையிட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அதிகாரிகளிடம் இயந்திரத்தின் செயல்பாடு, பயன்பாடுகள் குறித்து விசாரித்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மலைப்பகுதிகளில் உணவு பொருட்களை சேகரிக்கும் மலைவாழ் மக்கள் விற்பனைக்காக கீழே கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஒரு சில நாட்கள் மட்டுமே பொருட்கள் தாக்குப்பிடிக்கும் நிலையில் இயற்கையான உணவு பொருட்கள் அழுகி வீணாகிவிடுகிறது. இதனால், மலைவாழ் மக்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. எனவே, உணவு பொருட்களை பதப்படுத்த சோலார் உலர் கலன் வழங்கப்படுகிறது.
