பகல்பத்து உற்சவம் முதல் நாளில் நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் காட்சி

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் நீள்முடி கிரீடத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ேகாயிலில் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில், நாலாயிர திவ்ய பிரபந்தமானது பகல்பத்து மற்றும் ராப்பத்து இருபது நாட்கள் அபிநயத்துடன் படிப்பதாகும். அதற்காக ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

இந்நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு 7 மணி முதல் விடிய விடிய மூலஸ்தானத்தில் நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக பகல்பத்து உற்சவம் நேற்று (27ம் தேதி) தொடங்கியது.

இதையொட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நீள் முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், பவளமாலை, நெல்லிக்காய் மாலை, சூரிய பதக்கம் அலங்காரத்தில் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜருடன் அர்ச்சுன மண்டபத்துக்கு தனுர் லக்னத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்துக்கு 7.45 மணிக்கு வந்து சேர்ந்தார். அதன்பின் அரையர் சேவையுடன் காலை 8.15 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நம்பெருமாள் காட்சி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயக்காரர்கள் மரியாதைகளுடன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு, 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Related Stories: