பிரதமர் திட்டத்தில் மேலும் 6.5 லட்சம் வீடு கட்ட அனுமதி: மோடி பெருமிதம்

புதுடெல்லி: பிரதமரின் வீட்டு வசதி  திட்டத்தில் மேலும் 6.5 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  நகர்புறங்களில் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் பிரதமர் ஆவாஸ் திட்டம் (நகர்புறம்) கடந்த 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு  வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. 2.35 லட்சம் வரை இந்த மானிய பலன் கிடைக்கும்.  இந்த திட்டத்தில் இதுவரை ஒரு கோடி வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.  அவர் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் ஆவாஸ் (நகர்ப்புறம்) திட்டத்தில் நேற்று மட்டும் 6.5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், இந்த திட்டத்தில் நிதி பலன் பெற்ற வீடுகளின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘இந்த திட்டத்தின் மூலம் நுகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலன் பெற்றுள்ளது மகத்தான சாதனை. இந்த திட்டம் வெளிப்படை தன்மையுடன், தொழில் நுட்ப உதவியுடன் விரைவாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, நகர்ப்புற விவகார அமைச்சக குழுவினர் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இவர்களின் கடின உழைப்பால், ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு கிடைத்துள்ளது,’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: