தருமபுரி மாவட்டத்தில் உள்ள செல்லபம்பட்டி பஞ்சாயத்தில் தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை மாற்றியமைத்ததாக வாக்காளர்கள் குற்றச்சாட்டு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள செல்லபம்பட்டி பஞ்சாயத்தில் தேர்தலை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பஞ்சாயத்தில் தேர்தலை மக்கள் புறக்கணித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே செல்லபம்பட்டி பஞ்சாயத்தில் கோணம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 119 வாக்குகள் உள்ளன. இவர்கள் வழக்கமாக அருகில் உள்ள கிராமத்தின் அரசு பள்ளியில் வாக்குகளை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலுக்காக கோணம்பட்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் வாக்குச்சாவடியை மாற்றி அமைத்துள்ளதாகவும், இதனால் தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வாக்குச்சாவடியை மாற்றியமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அரூர் வட்டாட்சியர், சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Related Stories: