உளவுத்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உட்பட அரசு ஏஜென்சிகளுக்கு இனி விமான டிக்கெட் கிடையாது: 268 கோடி பாக்கி; ஏர் இந்தியா கறார்

புதுடெல்லி: அரசு ஏஜென்சிகள் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 268 கோடி பாக்கி வைத்துள்ளன. இவற்றில் 10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ள துறைகளுக்கு, அலுவல் ரீதியான பயணத்துக்கு இனி ‘கடனுக்கு’ டிக்கெட் வழங்க வேண்டாம் என  ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.  மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், சுமார் 60,000 கோடி கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. இந்த நிறுவன பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரமாக  செயல்பட்டு வருகிறது. பொதுவாக, அரசு நிறுவன அதிகாரிகளின் அலுவல் ரீதியான பயணத்துக்கு ஏர் இந்தியாதான் பயன்படுத்தப்படும். ஏர் இந்தியா சேவை இல்லாத இடங்களுக்கு மட்டுமே, தனியார் விமானத்தில் டிக்கெட் வாங்கப்படும்.  இதனால், அரசு அதிகாரிகளின் தொழில் முறை பயணங்களுக்கு ஏர் இந்தியாதான் பிரதான தேர்வாக இருக்கும்.

 ஆனால், முதன் முறையாக, காசு கொடுத்தால்தான் அரசு ஏஜென்சிகளுக்கு டிக்கெட் என்ற முடிவை ஏர் இந்தியா எடுத்துள்ளது. அரசு ஏஜென்சிகள் இதுவரை இந்த நிறுவனத்துக்கு தர வேண்டிய டிக்கெட் கட்டண பாக்கி ₹268 கோடி என  கூறப்படுகிறது. இதில், சிபிஐ, மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை, சுங்க கமிஷனர்கள், மத்திய தொழிலாளர் நிறுவனம், கலால் ஆணையம், மத்திய தணிக்கை வாரியம், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்டவை தலா 10 லட்சத்துக்கு மேல்  பாக்கி வைத்துள்ளன.  எனவே, முதற்கட்டமாக மேற்கண்ட அரசு ஏஜென்சிகள், அமைப்புகளுக்கு டிக்கெட் வழங்க தடை விதிக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. பாக்கியை தராவிட்டால், கட்டணம் வசூலித்த பிறகே டிக்கெட் வழங்குவது என்ற  முடிவை எடுத்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

ஒவ்வொரு மாநிலம் மற்றும் மண்டலத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தின் நிதித்துறை, அரசு துறைகள் எவ்வளவு பாக்கி வைத்துள்ளன  என்ற பட்டியல் தயாரிப்பில் ஏர் இந்தியா கடந்த மாதம் இறங்கியது. இதை தொடர்ந்து ‘டிக்கெட்  தடை’  அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில  வாரங்களில் சுமார் 50 கோடி பாக்கியை வசூல் செய்துள்ளதாக ஏர் இந்தியா  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய விமான போக்குவரத்து ஆணையம்,  சிவில் விமான  போக்குவரத்து அமைச்சகம், மக்களவை ஆகியவை பாக்கி  வைத்திருந்தாலும், தடையில் இருந்து இவற்றுக்கு மட்டும் விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை டாப்...

ஏர் இந்தியாவின் மேற்கு மண்டலத்தில் 22.8 கோடி பாக்கி உள்ளது. இதில், மும்பையில் உள்ள ராணுவ கணக்கு தணிக்கை அலுவலகம் அதிகபட்சமாக 5.4 கோடி பாக்கி வைத்துள்ளது. சிபிஐ 95 லட்சம், அமலாக்கத்துறை 12.8 லட்சம், மத்திய  ரயில்வே 36 லட்சம், மேற்கு ரயில்வே 4.8 லட்சம் பாக்கி வைத்துள்ளன. குறைந்த தொகையாக மும்பை போலீஸ் 7,781 பாக்கி வைத்துள்ளது. இதில் மும்பை எஸ்பி அலுவலகம் 3,811, மும்பை கமிஷனர் - மும்பை குற்றப்பிரிவு 3,970 பாக்கி  வைத்துள்ளனர்.

* டிக்கெட் தடை பட்டியலில் சிபிஐ, மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை, சுங்க கமிஷனர்கள், மத்திய தொழிலாளர் நிறுவனம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் அடங்கும்.

* 10 லட்சத்துக்கு மேல் டிக்கெட் கட்டண பாக்கி வைத்துள்ள அரசு துறைகளுக்குக்கு, அலுவல் ரீதியான விமான பயணத்துக்கு ‘கடனுக்கு’ டிக்கெட் வழங்குவதை நிறுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

* பல்வேறு அரசு ஏஜென்சிகள், நிறுவனங்கள், ஏர் இந்தியாவுக்கு தர வேண்டிய டிக்கெட் கட்டண பாக்கி 268 கோடி.

Related Stories: