செம்பரம்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 250 புடவைகள் பறிமுதல்

சென்னை: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 250 புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான, தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு புடவை விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சங்கமித்திரை தலைமையில் விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  அப்போது, ஆட்டோவில் புடவைகளை விட்டுவிட்டு அந்த கும்பல் சென்று விட்டது. இதையடுத்து, புடவையுடன் இருந்த ஆட்டோவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புடவை வினியோகம் செய்த நபர் யார்? எந்த கட்சியை சார்ந்தவர்கள்?  வாகனம் யாருடையது? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: