சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் வளாகத்தில் 18 அடி உயர ஆஞ்சநேயர் விக்ரகம் உள்ளது. ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இங்கு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு ஸ்ரீராமருக்கு அபிஷேகம், 8 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள், அரிசி மாவு, நெய், இளநீர், பன்னீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, எலுமிச்சம் சாறு, விபூதி, குங்குமம், களபம், சந்தனம் ஆகிய 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு ராமருக்கு புஷ்பாபிஷேகம், 7 மணிக்கு வாடாமல்லி, கிரேந்தி நீங்கலாக மல்லிகை, ரோஜா உள்ளிட்ட வாசனை மலர்களால் ஆஞ்சநேயர் சுவாமியின் கழுத்து வரை புஷ்பாபிஷேகம் நடந்தது.

இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் உள்ளூர் மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை: நாமக்கல்: நாமக்கல் கோட்டையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1 மணிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சி அளித்தார்.

Related Stories: