பர்கினோ பாசோவில் தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி: 80 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்

பர்கினா பசோ: பர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் பலியானார்கள். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினோ பாசோவில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. 2015ம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் தாக்குதல் என்பது பரவலாகி வருகின்றது. இந்நிலையில் சோம் மாகாணத்தில் உள்ள அர்பிந்தா நகரில் ராணுவ தளம் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தின் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 31 பேர் பெண்கள். இதனைத் தொடர்ந்து ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 80 தீவிரவாதிகள் அதிரடியாக கொல்லப்பட்டனர். மேலும் 7 வீரர்களும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிபர் ரோச் மார்க் கிறிஸ்டியன் கபூர் கூறுகையில், “தீவிரவாதிகளின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பெண்கள்” என்றார். தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்திய ராணுவம் மற்றும் வீரர்களை அவர் பாராட்டினார். தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 48 மணி நேரம் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாக அதிபர் அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அல்கொய்தா அமைப்பு இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனகூறப்படுகிறது.

Related Stories: