பண மதிப்பிழப்பு நேரத்தில் சத்துணவு கான்ட்ராக்டருக்கு சசிகலா கொடுத்த 237 கோடி

* செல்லாத நோட்டுக்கு 6 சதவீத வட்டியுடன் புது கரன்சி கேட்டு மிரட்டல்

* வருமானவரித்துறை அதிர்ச்சி தகவல்

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா தொழிலதிபர்களை மிரட்டி செல்லாத நோட்டுகளை கொடுத்து சொத்துகளை வாங்கி குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அந்த காலகட்டத்தில் அரசு  சத்துணவு கான்ட்ராக்டர் ஒருவரை மிரட்டி செல்லாத பணம் 237 கோடிக்கு வட்டியுடன் புதிய ரூபாய் நோட்டுகள் திருப்பித்தர சசிகலா ஒப்பந்தம் போட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு  நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நேரத்தில் சசிகலா தொழிலதிபர்களை மிரட்டி செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை கொடுத்து 1674 கோடிக்கு சொத்துகள் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை அறிக்கையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அவை வருமாறு: நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகத்தில் கடந்த 2017 நவம்பர் 9ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடந்தது. அப்போது அங்கு கிடைத்த ஒரு நோட்டில் சில தாள்கள் இருந்தன. இந்த நோட்டும், தாள்களும் சசிகலா உறவினர் சென்னை தி.நகரில் உள்ள டி.என்.அரிச்சந்தனா எஸ்டேட் நிறுவனத்தின் சிவக்குமாருக்கு தொடர்புடையது என அங்கிருந்த மேலாளர் பாலாஜி தெரிவித்தார். இந்த தாளில் சிலருக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிவக்குமார் அளித்த வாக்கு மூலத்தில், 2016 நவம்பர் 8ம் தேதி அப்போலோவில் வந்து தன்னை சந்திக்குமாறு சசிகலா கூறினார். அதன்படி அப்போலோ சென்று சசிகலாவை சந்தித்தேன். அப்போது திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி பிரைடு கிராம் தொழிற்சாலையின் உரிமையாளர் குமாரசாமியிடம் பேசி, செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்ட ₹500, ₹1000 நோட்டுகளை மாற்றும்படி கூறினார்.குமாரசாமி மதிய உணவு திட்டத்துக்கு மளிகை பொருட்கள் சப்ளை செய்யும் அரசு கான்ட்ராக்ட் எடுத்திருந்தார். சசிகலா ஆலோசனைப்படி நான் குமாரசாமியை சந்தித்து, ₹240 கோடி செல்லாத நோட்டுகள் தருவோம். அதற்கு பதிலாக ஒரு வருடம் கழித்து 6 சதவீத வட்டியுடன் ₹2000 புது நோட்டுகளாக தர வேண்டும் என்று டீல் பேசி, பணம் கைமாறியது. பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம் அளிக்கப்பட்ட கடைசி நாளுக்கு முந்தைய நாள் கைமாற்றப்பட்டது.இந்த பணத்தை சென்னை தி.நகர் வன்னியர் தெருவில் உள்ள காட்டேஜ் பில்டு ரிசார்ட் நிறுவனத்தில் இருந்து முதல் தவணையாக டிசம்பர் 29 அன்று 101 கோடி, 2வது தவணையாக டிசம்பர் 30ம் தேதி ₹136 கோடி என 237 கோடி வழங்கப்பட்டது. பேசிய ₹240 கோடியில், ₹237 கோடி மட்டும் இரு தவணைகளாக வழங்கப்பட்டது.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக 2018 ஜூலை 5ம் தேதி திருச்செங்கோட்டில் உள்ள குமாரசாமிக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது குமாரசாமியும், அவரது மருமகன் திருப்பதியும் சசிகலா மூலம் பணம் வாங்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.இதுதவிர 1911.50 கோடி வருமானம் வந்துள்ளது. அதை சசிகலா வெளியில் காட்டவில்லை. வருமான வரியும் செலுத்தவில்லை. மேலும் நமது எம்ஜிஆர் நாளிதழில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சியினர் பெயரில் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்துள்ளனர். ஆனால் சசிகலாவே அந்த விளம்பரத்தை வெளியிட்டு வருமானம் வந்தது போல் காட்டி, பல கோடிக்கு கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றி உள்ளார். இவ்வாறு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த கிறிஸ்டி நிறுவனம்

திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு சொந்தமான கிறிஸ்டி நிறுவனம் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முட்டை கொள்முதல், சத்துணவு திட்டத்திற்கு பருப்பு மற்றும் சத்துமாவு வழங்குவது உள்ளிட்ட டெண்டர்களை எடுத்துள்ளது. முட்டை டெண்டர் இந்த நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு முன்பு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கான்ட்ராக்டர்களுக்கு தான் டெண்டர் வழங்கப்பட்டு வந்தது. இவர்கள் வந்த பின்பு ஒட்டு மொத்தமாக தமிழகத்திற்கு டெண்டர் விடப்பட்டது. ஒட்டு மொத்தமாக கிறிஸ்டி நிறுவனத்திற்கு முட்டை முதல் டெண்டர் விடப்பட்டதால், பலகோடி ரூபாய்களில் கமிஷன் கைமாறியது. மேலும், பலகோடி ரூபாய் அளவில் முறைகேடுகளும் நடந்தது. அரசு டெண்டர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெறும். அதன்படி, இந்த முட்டை டெண்டரும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி மேற்பார்வையில் நடந்தது.

இவர்வெளிமாநிலத்தை சேர்ந்தவர். கிறிஸ்டி நிறுவனத்தின் வற்புறுத்தலாலேயே இந்தபெண் ஐஏஎஸ் அதிகாரி தமிழகத்திற்கு மாற்றப்பட்டதாகவும், கிறிஸ்டி நிறுவனத்திற்கு முட்டை டெண்டர் கிடைக்க வேண்டும் என்பதாலேயே இவரை நியமித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, மதிய உணவு திட்டத்திற்கு வழங்கப்படும் பருப்பு, சத்துமாவு ஆகிய டெண்டரும் கிறிஸ்டி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த டெண்டரிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை 5 முதல் ஒருவாரம் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டில் பலகோடி ரூபாய் ரொக்கம், தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, சசிகலா வீட்டில் நடந்த ஐடி சோதனையிலும் இதுதொடர்பான துண்டுச் சீட்டு சிக்கி உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: