சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்க மகாராஷ்டிராவில் தடுப்பு மையங்கள் அமைக்கப்படாது: முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி

மும்பை: சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு மையங்கள் எதுவும் மகாராஷ்டிராவில் அமைக்கப்படாது என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி அளித்துள்ளார்.  சட்டவிரோதமாக மாநிலத்தில் குடியேறியிருப்பவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு மையம் ஒன்றை நவி மும்பை, நெரூலில் தொடங்க முந்தைய தேவேந்திர பட்நவிஸ் அரசு முடிவு செய்திருந்தது. முன்னதாக இந்த இடத்தில் நவி மும்பை பெண் போலீஸ் நலச் சங்கம் செயல்பட்டு வந்தது. தற்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.

முதல்வர் உத்தவ் தாக்கரேயை சிவசேனா அலுவலகமான சேனா பவனில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அப்போது உத்தவ் தாக்கரே பேசியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு மையங்கள் சம்பந்தமாக பல தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. மகாராஷ்டிராவில் அதுபோன்ற தடுப்பு மையங்கள் எதுவும் அமைக்கப்படாது.  போதை மருந்து கடத்தல் போன்றவைகளில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்படும் வெளிநாட்டு பிரஜைகளை அடைத்து வைப்பதற்கு மட்டுமே இதுபோன்ற தடுப்பு மையங்கள் தற்போது உள்ளன. அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும்  நடவடிக்கைபூர்த்தியாகும் வரை இதில் வைக்கப்பட்டிருப்பார்கள். இதுபற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை

என்றார்.

கர்நாடகாவில் தடுப்பு முகாம்

பெங்களூருவை அடுத்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள நெலமங்களாவில், மாநிலத்தில் சட்டவிரோதமாக  தங்கியுள்ள வெளிநாட்டினரை அடைத்து வைப்பதற்கான முகாம் ஒன்றை கர்நாடக அரசு  மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அமைத்துள்ளது. மாநிலத்தில் ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை, அடைத்து வைப்பதற்கான கட்டிடம் இது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு இந்த கட்டிடம், கல்லூரி  விடுதிக்காக கட்டப்பட்டு முறையாக பயன்படுத்தப்படாமல்  கிடந்தது.

Related Stories: