நடந்து சென்ற மூதாட்டியிடம் கவரிங் நகை பறித்த சிறுவன் சிக்கினான்

பல்லாவரம்: குன்றத்தூரில், நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க நகை என நினைத்து கவரிங் நகையை பறித்து கொண்டு தப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டான். குன்றத்தூர், ஒண்டி காலனி, சரவணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி சரோஜா (65). நேற்று ஒண்டி காலனி, சடையாண்டி ஈஸ்வரன் கோயில் தெரு வழியாக சரோஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மொபட்டில் வந்த சிறுவன் ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சரோஜாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக்கொண்டு தப்ப முயன்றான்.  அதற்குள் சுதாரித்துக்கொண்ட சரோஜா, ‘திருடன்...திருடன்’ என சத்தம் போட்டார். அதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அந்த சிறுவனை மடக்கிப் பிடித்தனர். உடனே சிறுவனிடம் சென்ற சரோஜா, ‘‘தங்க நகை பறித்து இருந்தாலும் பரவாயில்லை. நான் அணிந்திருக்கும் கவரிங் நகையை பறித்து கொண்டு இப்படி மாட்டிக்கிட்டாயடா’’ என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அழ தொடங்கினான். பின்னர் பிடிபட்ட சிறுவனை பொதுமக்கள் குன்றத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பொதுமக்களிடம் சிக்கிய சிறுவன் போரூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவன் என்பதும், 18 வயது நிறைவடையாத இவன், தனது பெற்றோருடன் சேர்ந்து அதே பகுதியில் இடியாப்பம் விற்கும் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தனது பெற்றோர் செலவுக்கு பணம் தராததால் செயின் பறிப்பில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவன் மீது வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories: