நில உச்சவரம்பு சட்டப்படி சொத்து விவரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்: சார்பதிவாளர்களுக்கு அறிவுரை

சென்னை: நில உச்சவரம்பு சட்டப்படி பத்திரப்பதிவுக்கு வந்தவர்களிடம் பெறப்பட்ட சொத்து விவரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு  பதிவுத்துறை அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு நில உச்சவரம்பு சட்டப்படி பொதுமக்களிடம் படிவம் 15ல் அவர்களிடம் உள்ள  சொத்துக்கள், அந்த சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது மற்றும் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், மரங்கள் மற்றும் அதன் மதிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்த படிவத்தில் பெற வேண்டும். ஆனால், கடந்த காலங்களில்  பெரும்பாலான சார்பதிவாளர்கள் இது போன்று படிவம் 15ன் படி சொத்து விவரங்களை கேட்டு பெறுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதைபயன்படுத்தி கொண்டு அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகள் தங்களது பெயரிலும், பினாமி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த காலங்களில் நில  உச்சவரம்பு சட்டப்படி ஆவணங்கள் பெறப்பட்ட தகவல்களை சேகரித்து கடந்த நவம்பர் 4ம் தேதி அனுப்பி வைக்க ஐஜி அலுவலகம் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவின்  போது ஆவணதாரரர்கள் படிவம் 15 ஏதும் தாக்கல் செய்யவில்லை என்று என்று ஐஜி அலுவலத்துக்கு பதில் அளித்துள்ளனர்.

இதைதொடர்நந்து கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்களிடம் படிவம் 15ல் விவரங்களை சேகரித்து ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை சொத்து விவரங்களை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்பேரில் ஒரு சில சார்பதிவாளர்கள் மாவட்ட கலெக்டர்கள் அலுவலகத்தில்  பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்களிடம் படிவம் 15ல் பெறப்பட்ட சொத்து விவரங்களை தொகுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: