மதங்களை கடந்த மனித நேயம் ஐயப்ப பக்தர்களுக்கு வழி தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கோவை: குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆத்துப்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.  இந்நிலையில் பாதயாத்திரையாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிலர் இருமுடியுடன் ஆத்துப்பாலம் பகுதிக்கு வந்தனர். அவர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தின் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கூட்டம் காரணமாக ஐயப்ப பக்தர்கள் போக வழியின்றி தடுமாறினர். இதை பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், கூட்டத்தின் நடுவே வழி அமைத்து ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல உதவினர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  வழிபாட்டு முறைகளில் வேறுபட்டாலும் மற்றவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த பண்புதான் இந்திய தேசத்தின் ஆன்மா என்றும், மத வேற்றுமையில்லாத  பண்பாட்டில் தமிழகம் தேசத்திற்கே முன்னோடி என்றும் கருத்துகள் பதியப்பட்ட இந்த வீடியோ வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories: