உண்மையை சொல்றாரா? நையாண்டி செய்கிறாரா? : மோடி பேச்சு பற்றி காங். பதிலடி

புதுடெல்லி: பொருளாதார மந்த நிலையில் இருந்து மீளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என, டெல்லியில் நடந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் பற்றி பிரதமர் மிகவும் பெருமையோடு மார்தட்டி பேசியிருக்கிறார். ஆனால், நிஜமான சூழ்நிலை அப்படி அல்ல; நேர்மாறாக உள்ளது. பிரதமரின் இதுபோன்ற பெருமை பேச்சுகளும், வெற்று வாக்குறுதிகளும் நாட்டில் நிலவும் நிலவரத்துக்கு எதிரானதாகவே இருக்கின்றன. ஆனால், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவில் மிதக்கும் அவர், உண்மையான நிலவரத்தை ஏற்கவில்லை. பிரதமர் பதவியில் இருப்பவர் ஒன்றை கூறினால், அது மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும்.

ஆனால், பிரதமர் உண்மையில் அப்படி சொல்கிறாரா? அல்லது நகைப்பு செய்கிறாரா? என்று எனக்கு தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக, நாட்டின் பொருளாதாரம் இவரால் சீரழிக்கப்பட்டு விட்டது. ஆனால், அதை ஒப்புக்கொள்ள அவர் தயாராக இல்லை. ஜிஎஸ்டி வருவாய்க்கு ஆதாரமாக திகழும் தொழிற்சாலைகளில் உற்பத்தி நடக்கவில்லை; மக்கள் வாங்குவதில்லை. இது தொடர்பாக, பிரதமருக்கு வசதியான தேதியில் அல்லது இடத்தில் விவாதிக்க நாங்கள் மகிழ்ச்சியுடன் தயாராகவே இருக்கிறோம். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தற்போது நடக்கும் போராட்டங்களுக்கு அரசுதான் காரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: