தேசிய நுகர்வோர், கூட்டுறவு மாநாட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த தேசிய நுகர்வோர் மற்றும் கூட்டுறவு மாநாட்டில் அனைத்து மாநில விவசாயிகளும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். டெல்லியில் கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் சார்பில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் அதன் மதிப்புகள் பற்றிய கருத்தரங்கு, மாநாடு நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். மாநாட்டுக்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கருத்தரங்கில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயனடையும் வகையிலும், நிதி மற்றும் முதலீடு தொடர்பான புரிந்துணர்வும், நமது மாநிலத்தில் அதிகமாக விளையும் பொருட்களை தேவைப்படும் பிற மாநிலத்துக்கும், பிற மாநிலங்களில் விளையும் பொருட்கள் நம் மாநிலத்துக்கும் பரஸ்பரமாக பெறும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் விவசாயிகள் பயனடையும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையாக பல திட்டங்களை செய்து தர கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் இருக்கும் கூட்டுறவு பண்டக சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கணினி மையமாக பணிகளை மேற்கொள்ள தேசிய கூட்டுறவு வளர்ச்சிக்கழகம் சார்பில் ரூ.229 கோடி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் மாநிலத்தில் வெங்காயத்தின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதலாக வெளிநாட்டில் இருந்து வெங்காயம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய வெங்காயம் தமிழகத்திலும் விற்பனை செய்யப்படும்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள்தான் கோரிக்கை வைத்து வருகின்றன.

மாநில மக்களுக்கு பொங்கல் தொகுப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம், அதற்கு எந்த தடையும் கிடையாது. இது முதல்வரால் துவங்கப்பட்டதாகும். தமிழகம் என்பது ஒரு அமைதிப் பூங்காவாக உள்ளது. இங்கே அனைவரும் சகோதரர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மாநில அரசை பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கை காப்பதில் சிறந்து விளங்குகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: