மக்களின் குரலை காட்டுத்தனமான பலத்தை பயன்படுத்தி நசுக்குவதாக மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்

டெல்லி: குடியுரிமை சட்டம் குறித்து போராடும் மக்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். போராடும் மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் அடிப்படை உரிமைகளை காத்திட காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்

மக்களின் குரலை காட்டுத்தனமான பலத்தை பயன்படுத்தி நசுக்குவதாக மத்திய அரசுக்கு சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயத்தில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு . மக்களின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி சிறிதுகூட மதிப்பு அளிக்கவில்லை என்று சோனியாகாந்தி புகார் கூறியுள்ளார்.

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை பாஜக அரசு ஏவியிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. பாஜக அரசின் பிரிவினைவாத திட்டத்துக்கும் மக்கள் விரோத கொள்கைகளுக்கும் எதிராக தன்னெழுச்சியாக போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்கள், ஐஐஎம்களில் படிக்கும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்வுகாண வேண்டியது அரசின் கடமை ஆகும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மக்களின் குரலை மிருகத்தனமான பலத்தை பயன்படுத்தி அரசு ஒடுக்குவதை ஜனநாயகத்தில் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தம் பாரபட்சமானது; தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டம் ஏழைகளுக்கு எதிரானது. குடிமக்கள் பதிவேட்டு திட்டம் வந்தால், தாங்கள் இந்நாட்டின் குடிமகன்கள் என்று நிரூபிக்க கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டும். குடிமக்கள் பதிவேடு பற்றி மக்கள் கொண்டிருக்கும் அச்சம் நியாயமானதே என்று சோனியா காந்தி தெரிவித்தார். மக்களின் உரிமைகளை காக்கவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளதாக சோனியாகாந்தி உரையாற்றினார்.

Related Stories: