ஊழலில் சிக்கிய அன்புமணியை காப்பாற்ற ஈழத்தமிழர் உரிமையை காவு கொடுத்துள்ளார் ராமதாஸ்: டி.ஆர்.பாலு அறிக்கை

சென்னை: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியை காப்பாற்றுவதற்காக ஈழத்தமிழர் உரிமையை ராமதாஸ் காவு கொடுத்துள்ளார் என்று டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழினப் போராளி என்று, தனது நெற்றியில் தானே ‘‘ஸ்டிக்கர்’’ ஒட்டிக் கொண்ட பா.ம.க. நிறுவனத் தலைவர், ஈழத்தமிழினத்துக்கும் சிறுபான்மையினருக்கும் இழைத்த மாபெரும் துரோகம், நாட்டு மக்கள் மத்தியில் அம்பலமான அதிர்ச்சியில், மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏதோ, தன் வாழ்வே ஈழத்தமிழர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது போல், தன் மனதிற்குள் ஒரு கற்பனைக் கோட்டையைக் கட்டிக்கொண்டு, தி.மு.க.,வையும் எங்கள் கழக தலைவரையும் விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஒரேநேரத்தில் இரட்டைத் துரோகம் செய்கிறது. அண்டை நாட்டவர் வரலாம் என்றால், இஸ்லாமியரை தடை செய்வது ஏன் என்பதும், அண்டை நாடுகளின் பட்டியலில் இலங்கையைச் சேர்க்காதது ஏன் என்பதும்தான் திமுக தலைவர் எழுப்பிய கேள்விகள்.

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாங்கள் இந்த கேள்வியைத்தான் எழுப்பினோம். இரண்டு அவைகளிலும் எதிர்த்து வாக்களித்தோம். மக்களவையில் பா.ஜ.,வுக்கு அருதிப்பெரும்பான்மை இருப்பதால் வென்றது அந்தச் சட்டம். மாநிலங்களவையில் வெற்றி பெற்றதற்கு காரணம், அ.தி.மு.க. அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது. இந்தத் துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும், ராமதாஸ், அன்புமணிதான் காரணம். நாடு இன்று பற்றி எரிய இவர்களே காரணம்.

தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அந்தச் சட்டத்திருத்தத்தை ஆதரித்தார்கள் என்றால், பா.ம.க. ஆதரிக்க என்ன காரணம்? ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியை காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாசு. எனவே அ.தி.மு.க. கூட்டணி என்பது தமிழர் துரோகக் கூட்டணியாக ஆகிவிட்டது. அது வெளிச்சத்துக்கு வந்ததும்தான் எடப்பாடியும் ராமதாசும் புதிய புதிய பசப்பு வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். மக்களுக்கு இவர்கள் இருவரையும் நன்கு தெரியும். “யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து ஒளித்து வை” என்பது போன்ற ரகங்கள் இவர்கள்.

Related Stories: