சொத்தை பறித்துக்கொண்டு நடுரோட்டில் தவிக்கவிட்ட பரிதாபம்: தந்தைக்கு மாதம் 10 ஆயிரம் வீடு வழங்காவிட்டால் சிறை: மகனுக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை

சென்னை: சொத்தை பறித்துக்கொண்டு தந்தையை நடுரோட்டில் மகன் தவிக்கவிட்ட விவகாரத்தில், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி, தந்தைக்கு மாதம் 10 ஆயிரம் மற்றும் வீடு வழங்காவிட்டால் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும், என மகனுக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் வசித்து வருபவர் சிம்சன் ராஜ் (74). பின்னி மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி  20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன்கள்

தியோடர் விவேக் ராஜ் (44), விக்டர் ஞானராஜ் (43),  வால்டர் செல்வராஜ் (42). இதில், தியோடர் விவேக் ராஜ் மற்றும் வால்டர் செல்வராஜ் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. விக்டர் ஞானராஜ் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது. இதனால், திருமணமாகவில்லை. இவர், தந்தையுடன் வசித்து வருகிறார்.

மூத்த மகன் தியோடர் விவேக் ராஜ், மனைவியுடன் தங்களது இடத்தின் ஒரு பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.  கடைசி மகன் வால்டர் செல்வராஜ் தனது மனைவி, தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் விக்டர் ஞானராஜ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் 10 கடைகளும் உள்ளன. இதில், மாதம்  ரூ.2 லட்சம் வரை வாடகை வருகிறது. இந்நிலையில், கடைசி மகன் வால்டர் செல்வராஜ் கடந்த 6 வருடங்களுக்கு முன், தனது தந்தை மற்றும் மனநிலை  பாதிக்கப்பட்ட அண்ணன் விக்டர் ஞானராஜ் ஆகியோரை அடித்து உதைத்து,  வீட்டை விட்டு விரட்டியுள்ளார். கடைகளின் வாடகை பணத்தையும் அவரே பெற்று அனுபவித்து வருகிறார்.

இதனால், சிம்சன் ராஜ் மற்றும் விக்டர் ஞானராஜ் ஆகியோர் பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது நிலை குறித்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டப்படி தண்டையார்பேட்டை கோட்டாட்சியரிடம் சிம்சன் ராஜ் மனு அளித்தார். கோட்டாட்சியர் பலமுறை விசாரணைக்கு அழைத்தும் வால்டர் செல்வராஜ் நேரில் வரவில்லை. இதையடுத்து, தந்தை சிம்சன் ராஜ் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனுக்கு மாததோறும் ₹10 ஆயிரம் மற்றும்  வீட்டில் வசிப்பதற்கு உரிமை வழங்க வேண்டும் எனவும், இதை மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும், எனவும் கடைசி மகன் வால்டர் செல்வராஜுக்கு உத்தரவிட்டார்.  

பின்னர், திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் கோட்டாட்சியர் முத்துக்கள்வன் நேற்று சிம்சன் ராஜை  வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது, வால்டர் செல்வராஜ் அந்த வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவானது தெரிந்தது. இதையடுத்து, கோட்டாட்சியர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: