காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்: மோடி, அமித்ஷாவை சந்தித்து பேச திட்டம்

சென்னை: காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள ராஷ்டிரிய பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருநாள் பயணமாக இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

கூட்டம் முடிந்ததும், பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்தித்து பேசுகிறார். இதற்காக ேநரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது மத்திய அரசு அண்மையில் தமிழகத்தில் 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்கு பிரதமருக்கு எடப்பாடி நன்றி தெரிவிக்கிறார். மேலும் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார். குறிப்பாக, ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது. அதேபோல வருகிற பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் சென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்டு வரும் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி அழைப்பு விடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார். மோடியை சந்தித்தபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதல்வர் எடப்பாடி சந்திப்பார் என்று கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

Related Stories: