வெளிநாட்டில் பதுங்கியுள்ள நித்தியானந்தாவை பிடிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ் : கர்நாடக ஐகோர்ட்டில் அரசு தகவல்

பெங்களூரு: பெங்களூருவை அடுத்த பிடதியில் சாமியார் நித்தியானந்தா, ஆசிரமம் நடத்தி வருகிறார். அவரின் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக நித்தியானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன், ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தா ஒரு முறை மட்டும் ஆஜரானார். அதன்பிறகு 44 முறை ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, லெனின் கருப்பன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 9ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 12ம் தேதி நித்தியானந்தாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று மாநில போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.  இதையடுத்து, நித்தியானந்தாவை தேடும் முயற்சியில் கர்நாடகா போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நீதிமன்றம் டிசம்பர் 18க்கு விசாரணையை ஒத்திவைத்தது.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி நாகேந்திரா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘நித்தியானந்தா வெளிநாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், சர்வதேச போலீசான இன்டர்போல் மூலமாக, அவருக்கு ‘ப்ளுகார்னர் நோட்டீஸ்’ கொடுக்க முயற்சி செய்து வருகிறோம்,’’ என்றார். இதைத் தொடர்ந்து, அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்ட நீதிபதி, ‘‘நித்தியானந்தா உண்மையாக எங்கு இருக்கிறார்? அவரை பற்றிய முழு விவரங்களையும் அடுத்த முறை தாக்கல் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: