ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆன்லைன் வணிகத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார்.  மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மற்றும் மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல் வரவேற்றார். பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் போது, இந்திய வணிகத்தை முற்றிலும் சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

பிறகு விக்கிரமராஜா அளித்த பேட்டி: ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய சில்லறை வணிகம் முற்றிலும் அழிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தால் நாடு முழுவதும் 25 கோடி பேரும், தமிழகத்தில் 37 லட்சம் பேர் நேரடியாகவும், 1 கோடி பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.  ஆன்லைன் வர்த்தகம்  பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தை தகர்த்து விட்டது. இதை உணர்ந்து மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது. வருகிற 6, 7, 8 ஆகிய தேதிகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் டெல்லியில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்திடும் வகையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இதில் உண்ணாவிரதம், தொடர் கடையடைப்பு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: