பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை காணவில்லை: குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்கள் பாட்னா முழுவதும் பேனர்கள் வைப்பு

பீகார்: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை காணவில்லை எனக்கூறி குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்கள் பாட்னா நகர் முழுவதும் பேனர்கள் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமைச் சட்டத்துக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளது. எனினும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து ஏதும் கூறவில்லை. ஆனால் அம்மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் முதல்வர் நிதிஷ் குமாரை காணவில்லை எனக் கூறி பீகார் தலைநகர் பாட்னா முழுவதும் நேற்று இரவு குடியுரிமைச்சட்ட எதிர்ப்பாளர்கள் பேனர்கள் மற்றும் சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பர பேனர்களை போலீஸார் இன்று காலை முதல் அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: