பாளையங்கோட்டை மறை மாவட்ட புதிய ஆயர் அந்தோனிசாமி திருநிலைப்பாட்டு விழா: குருக்கள், துறவிகள், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கேடிசி நகர்: பாளை. மறைமாவட்ட புதிய ஆயர் அந்தோனிசாமி திருநிலைப்பாட்டு விழா, பாளை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நேற்று (15ம் தேதி) மாலை நடந்தது. இதில் குருக்கள், துறவிகள், கிறிஸ்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாளையங்கோட்டை மறைமாவட்ட புதிய ஆயராக நியமிக்கப்பட்ட அந்தோனிசாமியின் திருநிலைப்பாட்டு விழா, நேற்று நடந்தது. இதையொட்டி பாளை. தூய சவேரியார் பேராலயத்தில் மாலை 3.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பு ஆயர் அந்தோனி பாப்புசாமி, புதிய ஆயர் அந்தோனிசாமியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். பாளை. மறை மாவட்ட சான்ஸ்லர் அந்தோனி குரூஸ் உடனிருந்து கையெழுத்திட்டார். பேராலய பீடத்தில் புதிய ஆயர், கத்தோலிக்க திருஅவையின் நம்பிக்கை அறிக்கையை கூறி கத்தோலிக்க அவையின் திருத்தந்தைக்கும், அவர் வழியில் வரும் திருத்தந்தையர்களுக்கும் பிரமாணிக்கமாய் இருப்பதற்கான உறுதிமொழியை வாசித்து ஏற்றார்.

இதைத்தொடர்ந்து புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்ட  பவனி, தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வெர்டியர் திடலை வந்தடைந்தது. இதில் ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. மாலை 5 மணிக்கு திருநிலைப்பாடு நிகழ்ச்சி  நடந்தது. இதற்கு  மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி தலைமை வகித்தார். நற்செய்தி வாசகத்திற்குப் பிறகு பாளை. மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு சேவியர் டெரன்ஸ், கத்தோலிக்க சபையின் தலைவரான போப் ஆண்டவரின் உறுதிமொழி அறிக்கையை ஏற்று பாளை மறைமாவட்ட 3ம் ஆயராக அருள்முனைவர் அந்தோனிசாமியை திருநிலைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோனி ஆனந்தராயர், புதிய ஆயரின் கடமைகள் குறித்து மறையுரை ஆற்றினார்.

இதையடுத்து பேராயர் அந்தோனி பாப்புசாமி, முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ், சிவகங்கை ஆயர்  சூசை மாணிக்கம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மறைமாவட்ட ஆயர்கள் முன்னிலையில் பாளை மறைமாவட்ட 3ம் ஆயராக அருள்முனைவர் அந்தோனிசாமியை திருநிலைப்படுத்தினார். புதிய ஆயருக்கான மோதிரம், மணிமகுடம் அணிவிக்கப்பட்டதோடு செங்கோலும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.

பின்னர் புதிய ஆயர் அந்தோனிசாமி, புதிய ஆயருக்கான அரியணையில் அமர வைக்கப்பட்டார்.  பாளை மறை மாவட்ட பேராலய பங்குத்தந்தை சேவியர் ராஜேஷ், திருச்சிலுவையை புதிய ஆயருக்கு முத்தமிட்டு வழங்கினார். புதிய ஆயர், திருப்பலி நடத்தி அனைவருக்கும் ஆசி வழங்கினார். பாளை மறை மாவட்ட செயலக  முதல்வர் அந்தோனி குரூஸ் அடிகளார்,  கேடிசி நகர் பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், கோவில்பட்டி மறை வட்ட அதிபர் துரைராஜ் அடிகளார்,

பாளை இயேசுசபை  இல்ல தலைவர் ஹென்றி ஜெரோம், இயேசு சபை மதுரை மறை மாநிலத் தலைவர் டேனிஸ் பொன்னையா, சென்னை மறை மாநில நியமனத் தலைவர் ஜெபமாலை ராஜா உள்ளிட்டோர் புதிய ஆயருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். விழாவில் சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனி, வாழ்த்திப் பேசினார். பாளை மறை மாவட்டம் சார்பில் முன்னாள் ஆயருக்கும், அப்போஸ்தலிக்க பரிபாலகருக்கும், புதிய ஆயர் அந்தோனிசாமி நன்றி தெரிவித்தார். விழாவையொட்டி தூய சவேரியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர். புதிய ஆயர் பதவியேற்பு நிகழ்ச்சியால் மாநகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாடுகளை  பாளை மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர், முன்னாள் ஆயர், குருக்கள்,  துறவிகள், பொது நிலையினர் உள்ளிட்ட ஆயர் திருநிலைப்பாட்டு ஒருங்கிணைப்பு  குழுவினர் செய்திருந்தனர்.

போப் ஆண்டவர் வாழ்த்து

பாளை மறைமாவட்ட 3ம் ஆயராக நேற்று திருநிலைப்படுத்தப்பட்ட அந்தோனிசாமிக்கு, கத்தோலிக்க தலைமை சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சீஸ், புதிய ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான உறுதிமொழி அறிக்கையை அளித்திருந்ததோடு அதில் தனது மனமுவந்த வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். இந்த உறுதிமொழி அறிக்கை விழாவில் வாசித்து அளிக்கப்பட்டது.

36 ஆயர்கள் பங்கேற்பு

பாளையில் நடந்த புதிய ஆயர் திருநிலைப்பாட்டு விழாவில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 36 ஆயர்கள் பங்கேற்றனர். இவர்கள், புதிய ஆயர் அந்தோனிசாமியின் தலையில் கரம்வைத்து ஆசி வழங்கினர்.

Related Stories: