உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் குற்றவாளி : தண்டனை விவரம் டிச.19-ல் அறிவிப்பு

புதுடெல்லி: உன்னாவ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாரதிய ஜனதா எம்எல்ஏவான குல்தீப்சிங் மீது 2017ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி இளம்பெண் ஒருவர் பலாத்கார புகார் கூறியிருந்தார். இதுகுறித்து புகார் அளித்த சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த பெண் வழக்கு விசாரணைக்காக தனது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் இரண்டு பேருடன் காரில் ரேபரேலி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி, அவர்கள் மீது மோதியதில் உறவினர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அந்த பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சிறுமிக்கும், அவரது வழக்கறிஞருக்கும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, எம்.எல்.ஏ., மீது, சி.பி.ஐ., 5 வழக்குகள் தொடர்ந்தது. சி.பி.ஐ. தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்காருக்கான தண்டனை விவரங்கள் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த சசி சிங் என்பவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Related Stories: