திருவண்ணாமலையில் பரபரப்பு கோயில் ஊழியர்களுடன் தகராறு பாதுகாப்பை புறக்கணித்த போலீசார்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஊழியர்களுக்கும், போலீசுக்கும் ஏற்பட்ட பிரச்னையால், பாதுகாப்பு பணியை போலீசார் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா முடிந்தாலும், வரும் 20ம் தேதி வரை மலை மீது மகா தீபம் காட்சியளிக்கிறது. இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக வரும் 20ம் தேதி வரை அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலில் தொடர்ந்து பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதில் போலீசுக்கும், கோயில் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தரிசனத்துக்கு சென்றபோது, சிறப்பு தரிசன கேட்டை திறக்காமல் பூட்டிவிட்டு கோயில் ஊழியர்கள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கோயிலில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தங்களை, கோயில் ஊழியர்கள் அவமதித்ததாக போலீசார் வேதனை அடைந்தனர். இதையடுத்து கோயில் பிரகாரங்களில் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நேற்று காலை 11 மணியளவில் திடீரென பணியை புறக்கணித்து டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். ஆனால், ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், தெற்கு கோபுர பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், ஆயுதம் ஏந்திய போலீசாரும் பணியில் தொடர்ந்தனர். கிளிகோபுர நுழைவாயிலில் பணியில் ஈடுபட்ட போலீசாரும், அங்கிருந்து அம்மணி அம்மன் கோபுர பணிக்கு சென்றுவிட்டனர். அதைத்தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், எஸ்பி சிபிசக்ரவர்த்தியை தொடர்புகொண்டு பேசியுள்ளார். பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியை தொடருமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின் பகல் 2 மணிக்கு போலீசார் பணிக்கு திரும்பினர். கார்த்திகை தீபத்தின்போது, ஊழியர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் போலீசார் கெடுபிடி செய்ததன் எதிரொலியாக, தற்போது அவர்கள் போலீசுக்கு ஒத்துழைக்காமல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த திடீர் பணிபுறக்கணிப்பு போராட்டம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Related Stories: