ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜய பாஸ்கரின் தம்பி மனைவிக்கு 9 கோடி சொத்து

கரூர்: சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து கணக்குகளை தாக்கல் செய்வது கட்டாயமாக இருந்தது. இதனால் அவர்கள் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என அடுத்த முறை தேர்தலில் போட்டியிடும்போது எல்லாம் தெரிந்து விடும். அதேபோலத்தான் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் சொத்துக் கணக்குகளை காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வேட்பு மனுவுடன் ‘3ஏ’ என்ற உறுதி படிவமும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் உள்ளாட்சி வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல் மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது.

அதில், கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மனைவி சாந்தி போட்டியிடுகிறார். நேற்றுமுன்தினம் வேட்பு மனு தாக்கலில் சாந்தி பெயரில் மற்றும் கணவர் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரொக்கம் என 8 கோடியே 90 லட்சத்து 84,030 இருப்பதாக  தெரிவித்துள்ளார். அதேபோல, கரூர் ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாகரன், ₹2கோடியே 28 ஆயிரம் என சொத்து மதிப்பை காட்டியுள்ளார். இதே ஊராட்சியில் செல்லையா சிவா என்ற வேட்பாளர் 2 கோடியே 12 லட்சமும், லீலா என்பவர் 2 கோடி சொத்து இருப்பதாக காட்டியுள்ளனர்.

Related Stories: