தள்ளாடும் இன்ஜினியரிங் நிறுவனங்கள் தொழில் தேக்கத்தால் அடுத்தடுத்து மூடல்: பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

கோவை: கோவை பகுதியில் இன்ஜினியரிங் நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் சரிந்து, தள்ளாடுகின்றன. தொழில் தேக்கத்தால் ஆலைகள் மூடப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக, குறிச்சி சிட்கோ, பீளமேடு, ஆவாரம்பாளையம், அரசூர், தென்னம்பாளையம், கோவில்பாளையம், பொள்ளாச்சி ரோடு கணபதி, ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்ஜினியரிங் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த ஆலைகளில், ஜவுளித்துறைக்கு தேவையான டெக்ஸ்டைல் இயந்திரங்கள், விவசாயத்துக்கு தேவையான பம்புசெட் மோட்டார், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான ஆட்டோமொபைல் உதிரிபாகம், தொழிற்சாலைகளுக்கு தேவையான பம்புசெட், வால்வு உற்பத்தி, வீடுகளுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்துறையில், நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

வேலை தேடி வருவோருக்கு எல்லாம், வேலை வழங்கி வந்த இந்நிறுவனங்கள் தற்போது இருக்கிற தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. காரணம், அந்த அளவுக்கு தொழிலில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, 2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு, வங்கிக்கடன் மறுப்பு ஆகியவற்றால் இத்துறையின் உற்பத்தி தலைகீழாக சென்றுவிட்டது. குறு, சிறு, நடுத்தர இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள் 35 சதவீதம் மூடப்பட்டு விட்டன. இந்நிறுவனங்களுக்கு அடிப்படையாக விளங்குவது பவுண்டரி ஆலைகள். இந்த ஆலைகளில், ஸ்டீல் காஸ்டிங் மற்றும் அயர்ன் காஸ்டிங் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விதிப்பு மற்றும் மூலதன தட்டுப்பாடு காரணமாக, இன்ஜினியரிங் ஆலைகளைப்போல், பவுண்டரி ஆலைகளும் தள்ளாடுகின்றன. 2016ம் ஆண்டுக்கு முன்பாக, மாதம் 1,500 டன் பொருட்கள் உற்பத்தி செய்து வந்த ஒரு பவுண்டரி ஆலையில், தற்போது 300 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.  

ஜிஎஸ்டி நடைமுறைக்கு முன்பாக, இன்ஜினியரிங் தொழிலுக்கு 5 சதவீத ‘வாட்’ வரி விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இதனால், இத்தொழிலில் கடுமையான தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஜினியரிங் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால், இதை சார்ந்துள்ள லேத் ஒர்க்‌ஷாப் உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்களில் வாரம் 2 நாள் கட்டாய விடுமுறை விடப்படுகிறது. பெரிய நிறுவனங்களில் மாதம் 10 நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்மூலம், தொழிலாளர்களுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் சம்பளம் இழப்பு ஏற்படுகிறது. கோவையில் உள்ள வால்வு உற்பத்தி நிறுவனங்கள், 90 சதவீத பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. கோவையில் உள்ள ஒரு முன்னணி வால்வு நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் ரூ.30 கோடி மதிப்புள்ள வால்வுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

ஆனால், தற்போது ரூ.2 கோடி அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது. மூலதன முதலீடு நிரந்தரமாக கிடைக்க மத்திய அரசும், வங்கிகளும் போதிய ஏற்பாடு செய்து கொடுக்காதது இந்த ஆலைகளுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

‘வாட்’ வரி விதிப்பு நடைமுறையில் இருந்தபோது, மாதம் ஒருமுறை மட்டும் கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால், தற்போது மாதம் இருமுறை ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்யவேண்டியுள்ளது. இருமுறை தொடர்ச்சியாக ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய தவறிவிட்டால், அந்த நிறுவனத்தின் ஜிஎஸ்டி கணக்கு எண் முடக்கப்பட்டு, மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உற்பத்தியை தொடர முடியாமல் தவிக்கின்றன.  

கோவையில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜாப்ஆர்டர் பெற்று, உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கின்றன. இந்நிறுவனங்களை நடத்துவோர் பலர், கம்ப்யூட்டர் அறிவு இல்லாதவர்கள். இவர்களையும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வந்து, 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதன்காரணமாக, 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் லே-ஆப் அறிவித்து விட்டன. ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உதிரிபாகம் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்களிலும் 20-30 சதவீதம் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில் மந்தநிலை காரணமாக, கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளில், இன்ஜினியரிங் துறையில்  மட்டும் ஒரு லட்சத்துக்கும் ேமற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

இதுபற்றி கோவை மாவட்ட பொறியியல் பொதுத்தொழிலாளர் சங்க (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் கே.எம்.செல்வராஜ் கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு அரசு கஜானாவில் நிறைய பணம் குவிகிறது எனக்கூறி மத்திய பா.ஜ அரசு தவறான பிரசாரம் செய்கிறது. ஜி.எஸ்.டி அமலுக்கு முன்பாக ஆண்டுக்கு 52 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது 44 சதவீதம் மட்டுமே வரி வசூல் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி.யால் தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டதே தவிர, வளர்ச்சி இல்லை. தொழில்துறை 50 ஆண்டு பின்னோக்கி சென்றுவிட்டது. இன்ஜினியரிங் துறையில் ஏற்பட்டுள்ள தொழில் மந்தநிலை காரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள் என மூன்று விதமான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். புலம்பெயரும் தொழிலாளர்கள், வடமாநிலங்களில் இருந்து வருகை தருகிறார்கள்.

இவர்களுக்கு தனி தொழிலாளர் நலச்சட்டம் உள்ளது. இதை, எந்த நிறுவனங்களும் அமல்படுத்துவது இல்லை. ஒப்பந்த தொழிலாளர்கள், 2 ஆண்டில் 480 நாட்கள் பணிபுரிந்தால் அவர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுவும் பின்பற்றப்படுவது இல்லை. ஆலைகளில் லே-ஆப் கொடுக்கும்போது, நிரந்தர தொழிலாளர்களுக்கு 50 சதவீதம் சம்பளம் வழங்கவேண்டும். இதையும் பெரும்பாலான ஆலைகள் வழங்குவது இல்லை. இதுபோன்ற சீரமைப்பு பணிகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கே.எம்.செல்வராஜ் கூறினார்.

இன்ஜினியரிங் பொதுத்தொழிலாளர் சங்க துணை பொதுச்செயலாளர் தங்கவேல் கூறுகையில்: ‘‘மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்கின்றன. இவை, மொத்த தொழில்துறையில் வெறும் 10 சதவீதம்தான். ஆனால், 90 சதவீத இதர தொழில்நிறுவனங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. இதனால், மூலதன முதலீடு பாதிக்கப்பட்டு, தொழில் நிறுவனங்கள் திண்டாடுகின்றன. இந்த நிலையை போக்கவும், தொழிலாளர் நலன் காக்கவும் மத்திய-மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளின் நலன், தொழிலாளர் நலன் ஆகியவை ஒருசேர பாதுகாக்கப்பட வேண்டும்,’’ என்றார். தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இதனால், இத்தொழிலில் கடுமையான தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரூ.2 கோடி அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது. மூலதன முதலீடு நிரந்தரமாக கிடைக்க மத்திய அரசும், வங்கிகளும் போதிய ஏற்பாடு செய்து கொடுக்காதது இந்த ஆலைகளுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

Related Stories: