அண்ணாமலையாரும் முக்கியம்; ஆம்புலன்சும் முக்கியம்: திருவண்ணாமலை தேரோட்டத்தில் நெகிழ்ச்சி

தி.மலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். திருக்கோயிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா

கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, அதிகாலை அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்குத் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதன்பின்பு, கோயிலில் உள்பிரகாரத்தில் வலம் வந்த பஞ்ச மூர்த்திகள் கோயிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள தேரில் எழுந்தருளினர். அதன்பின்பு, மகா தேரோட்டம் தொடங்கியது. முதலாவதாகக் காலை 6 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அதன்பின்பு முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், தேரோட்டமும் நடைபெற்றது.

பராசக்தி அம்மன் தேரை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இறுதியாக சண்டிகேசுவரர் தேரோட்டத்துடன் தேர்த் திருவிழா நிறைவுபெறுகிறது.

இந்த தேரோட்டத்தையொட்டி, காலை முதலே திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார வட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

இதற்கிடையே, திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது, மருத்துமனைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக வந்தது. இதனை கண்ட பக்தர்கள் உடனே ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட்டனர். கோடி கணக்கில் குவிந்த பக்தர்கள் ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட்ட இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: