காரைக்குடியில் குடிமராமத்து பெயரில் கிராவல் மண் கடத்தல்

*வெளிமார்க்கெட்டில் கூவிக்கூவி விற்பனை

காரைக்குடி :  காரைக்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடக்கும் கண்மாய் குடிமாரமத்து பணிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பள்ளம் வெட்டி கிராவல் மண் கடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி சங்கு சமுத்திர கண்மாய், தலக்காவூர் கண்மாய் மற்றும் குளங்களில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது. இப்பணிகள் நடக்கும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை விட அதிக ஆழத்தில் பள்ளம் வெட்டி கிராவல் மண் கடத்தப்பட்டு வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

 சங்கு சமுத்திர கண்மாயை பொறுத்தவரை  100 ஏக்கருக்கு மேல்  பரப்பளவு உள்ள இந்த கண்மாய் கடந்த மாதம் குடிமாரத்து பணி துவங்கப்பட்டது. தனியார் ஒப்பந்ததாரர் இரண்டு பேருக்கு மண் எடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கு, கிழக்கு என இரண்டு பகுதியில் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இக்கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்தி, உபரி கிராவல் மண்ணை சாலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 0.90 மீட்டர் ஆழ அளவிற்கு பள்ளம் வெட்டி கிராவல் மண் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 அடி முதல் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் வெட்டி மண் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கிராமப்பகுதிகளில் உள்ள கண்மாய்களில் அதிக ஆழத்தில் பள்ளம் வெட்டி மண் கடத்தப்படுவதோடு கண்மாயில் இருந்த விலை உயர்ந்த மரங்களும் வெட்டி கடத்தப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிராவல் மண் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தும்,  இந்த கிராவல் மண் வெளிமார்க்கெட்டில் ரூ.5000 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: