திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கணவன்-மனைவி வேடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய இளம்பெண் உள்பட 4 பேர் கைது: வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்

மார்த்தாண்டம்: திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.   குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றாக மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் உள்ளது. சிவாலய ஓட்டத்தில் இது 2வது சிவாலயமாகும். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ஐம்பொன்னால் ஆன சாமி சிலை, உண்டியலில் இருந்த காணிக்கை பணம், செம்பால் செய்யப்பட்ட நந்தி, வெள்ளி மற்றும் செம்பால் ஆன திருமுகங்கள், செம்பால் ஆன திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.   இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷானவாஸ் (35), அவரது நண்பர் உசேன் (37), இவரது கள்ளக்காதலி ஸ்மிதா(34), ஏசுதாஸ்(38), சதீஷ்பாபு(49) ஆகிய 5 பேருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து வழக்குபதிவு செய்தனர்.

இவர்களில் ஏசுதாஸ் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கேரளாவில் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தெரியவந்ததாவது:-

உசேனும், ஸ்மிதாவும் கணவன்-மனைவிபோல் காரில் வந்து கோயில்களை நோட்டமிடுவர். மிக பழமையான கோயில்களில் உள்ள புராதன பொருட்களுக்கு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளது. இதனால் புராதன கோயில்களுக்கு சென்று பார்வையிடுவார்கள். அதன்படி கன்னியாகுமரி திக்குறிச்சி மகாதேவர் கோயிலையும் பார்வையிட்டுள்ளனர். ஆற்றங்கரையில் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் இந்த கோயிலில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஆகஸ்ட் 31ம் தேதி காரில் வந்து பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு திருவல்லம் சென்றுள்ளனர்.

அங்குள்ள பாலத்தில் இருந்து மதிப்பு குறைவான பொருட்களை ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர் விலைமதிப்பு மிக்க சிலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால், சிலைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், போலீசில் பிடிபட்டு விட்டனர். இதையடுத்து, 4 பேரையும் நேற்று மார்த்தாண்டம் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: