ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளரின் 34 செல்போன்களை அபேஸ் செய்த 2 ஊழியர்கள் சிக்கினர்

அம்பத்தூர்: ஆன்லைனில் பொருட்களை விற்கும் தனியார் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய விலை உயர்ந்த 34 செல்போன்களை அபேஸ் செய்த 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனங்களில், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை, அவர்களிடம் விநியோகம் செய்யும் தனியார் ஏஜென்சி, அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது.இந்நிலையில், அம்பத்தூர் பகுதியில் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் முறையாக தங்களிடம் வந்து சேர்வதில்லை, என அதிகளவில் புகார்கள் வந்தன. இதுகுறித்து மேற்கண்ட நிறுவனத்தின் ஆய்வின் போது சமீபத்தில், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய 34 செல்போன்கள் மாயமானது தெரிய வந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் அசோக், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்.ஐக்கள் அனுருதீன், முத்துராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நிறுவனத்தில் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்யும் ஊழியர்கள் 2 பேர்  மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Advertising
Advertising

போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  அதில், அவர்கள் செங்குன்றம், ராஜாங்கம் நகர், கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வினோத்குமார் (22), ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த ஜான்சன் (26) ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய விலை உயர்ந்த செல்போன்களை அபேஸ் செய்து, வெளியில் விற்று பணம் பெற்றது தெரியவந்தது. அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ₹1.7 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நேற்று மாலை கைது செய்து, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: