மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு உடனடியாக விசாரிக்க முறையீடு : உரிய முடிவு எடுப்பதாக நீதிபதிகள் உறுதி

மதுரை: மேயர் மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளையில் முறையிடப்பட்டது. தமிழகத்தில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை தேர்தலின்றி மறைமுகமாக தேர்வு செய்திடும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஸ்வி அவசர சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அதில், ‘‘மறைமுகமாக தேர்தல் நடத்துவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதனால், குதிரை பேரம் நடக்கும். பஞ்சாயத்துராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். கவுன்சிலர்கள் கூடி மேயர் மற்றும் தலைவரை தேர்வு செய்யும்போது, மக்களுடன் நேரடித் தொடர்பில்லாமல் போய்விடும். எனவே, மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது தொடர்பான அரசு அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வக்கீல் நீலமேகம் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோரை மறைமுகமாக தேர்வு செய்வதற்கான அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். எனவே, எங்களது மனுவை உடனடியாக அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், ‘‘இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரிக்கப்படவுள்ளது. சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது’’ என்றார். வக்கீல் நீலமேகம்‘‘அந்த வழக்குகள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பானது. எங்களது மனு மறைமுக தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை எதிர்ப்பது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘இதுகுறித்து உரிய முடிவெடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: