கொல்லிமலை அருவிகளில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நாமக்கல்: கொல்லிமலை அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால், ஆகாய கங்கையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை,கடல் மட்டத்தில் இருந்து 4100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு செல்லும்பாதை 70 கொண்டை ஊசி வளைவு களை கொண்டதாகும். கடந்த ஒரு வாரமாக கொல்லிமலையில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அரப்பளீஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

அரப்பளீஸ்வரர் கோயில் அருகில் இருந்து 1020 படிக்கட்டுகளை கடந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். ஆனால் அருவில் தண்ணீர் வெள்ளம் போல ஓடுவதால் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகில் கூட நெருங்க முடியவில்லை. கொல்லிமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொட்டி தீர்க்கும் கன மழையால் ஆகாயகங்கை ஆர்பரித்துள்ளது. தொடர் மழை காரணமாக ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் ஆகாய கங்கை ஆபத்தான பகுதியாகி மாறியுள்ளது. ஆகாயகங்கை ஆக்ரோஷமாக கொட்டும் நிலையில், இடி மின்னல் மழை, குளிர் என பல்வேறு மாற்றங்களை கொல்லிமலை கண்டுள்ளது. அரப்பளீஸ்வரர் கோயில் அருகே சிற்றருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கிறார்கள்.

ரம்மியமான சீதோஷ்ண நிலையை காண பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கிறார்கள். அருவியில் குளிக்க முடியா விட்டாலும் மூலிகை கலந்த சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது. இதனால் புதுமையான அனுபவம் ஏற்படுகிறது என சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள். கொல்லிமலையில் கொட்டி தீர்க்கும் மழை, அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர் மலை இடுக்குகள் வழியாக சென்று, திருச்சி மாவட்டம் புளியஞ்சோலையை அடைகிறது. அங்கு இருந்து பச்சை பெருமாபட்டி, இடைக்குடி ஆளத்துபாளையம் ஆகிய பகுதியில் உள்ள இடங்களில் ஏரி குளங்களை நிரப்பிவிட்டு, முசிறி அருகே காவிரியில் கலக்கிறது.

2வது நாளாக குளிக்க தடை

சேந்தமங்கலம்: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் 2வது நாளாக குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வந்தது. இதனால், காட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாசில்லா அருவி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, நம்மருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர் மழையால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. கடந்த 2 வாரமாக கொல்லிமலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிர் வாட்டி எடுக்கிறது.

இதன் காரணமாக விடுமுறை தினத்தில் கூட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. நேற்று முன்தினம் அதிகாலை வரை கொல்லிமலையில் பலத்த மழை பெய்ததால், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நுங்கும் நுரையுமாக தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதித்துள்ளனர். நேற்று 2வது நாளாக தடை நீடித்தது. இதுபற்றி அறியாமல் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: