உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுக மனு அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரணை : உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் தொகுதி மறுவரையறை தேர்தல் சட்ட விதிகளின் அடிப்படையில் முழுமை செய்து முடித்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை பட்டியலை வெளியிட வேண்டும் என திமுக தொடர்ந்த மனுவை அவசர வழக்காக எடுத்து உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை டிசம்பர் 2வது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. .இந்த நிலையில் திமுக தரப்பில் கடந்த வாரம் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எங்களது தரப்பில் தொடர்ந்த மனு மீது இன்னும் இறுதி தீர்ப்பு எதுவும் பிறப்பிக்கப்படாமல் உள்ளது என குறிப்பிடப்பட்டது. நேற்று காலை மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நேற்று, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதில், “தமிழகத்தில் மாநிலம் முழுவதும் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எங்களது தரப்பில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களது தரப்பு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

இதேபோல் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்ட வாக்காளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா முன்வைத்த கோரிக்கையில், “தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை என்பது இன்னும் முடிவடையவில்லை. அதனால் வாக்காளர்கள் தங்களுக்கான வாக்கு எந்த தொகுதியில் உள்ளது என்று குழப்பத்தில் உள்ளனர். இது அவர்களது வாக்குரிமையை பாதிக்கும் செயலாகும். அதனால் அனைத்து பணிகளும் முழுமை அடைந்த பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் விவகாரத்தில் திமுக மற்றும் வாக்காளர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இவர்களது மனுவை அவசர வழக்காக எடுத்து வரும் 5ம் தேதி அதாவது வியாழக்கிழமை நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும்’’ என உத்தரவிட்டார். இதில் தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் உச்ச நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை எடுத்து விசாரிக்க உள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: