மாற்றம் கண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம்: பெருங்கால் விவசாயிகள் மகிழ்ச்சி

அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் மணிமுத்தாறு அணைநீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பெருங்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் டிசம்பர் மாதத்தில்தான் அணைகள் நிரம்புவது வழக்கம். இவ்வாண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், நவம்பர் மாதமே பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட பிரதான அணைகள் நிரம்பின. ஆனால் 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை மட்டும் இவ்வாண்டு பரிதாபமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம், தென்காசி, குற்றாலத்தில் பெய்த கூடுதல் மழையை, மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதிகள் பெறமுடியாமல் தவித்தன.இதன் காரணமாக கடந்த நவம்பர் 28ம்தேதி 77 அடி தண்ணீர் இருப்பு என மணிமுத்தாறு மந்தகதியில் காட்சியளித்தது. அந்த அணை இவ்வாண்டு சதம் அடிக்குமா என்பதில் கூட சந்தேகம் நிலவியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குளங்களிலும், கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்த சூழலில், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், பெருங்கால் பாசன விவசாயிகளை கவலைக்குள்ளாக்கி வந்தது.ஏனென்றால் பெருங்கால் பாசனத்தில் 90 அடியை நீர்மட்டம் தாண்டிய பின்னரே தண்ணீர் திறக்கப்படும். இதனால் மணிமுத்தாறு ரீச் விவசாயிகள் கோடைக்காலத்தில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வகையில் நாலுமுக்கு, மாஞ்சோலை, ஊத்து மலைப்பகுதியில் 150 மி.மீட்டருக்கும் மேலாக மழை கொட்டிதீர்த்தது. அதன் விளைவாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகம் காணப்பட்டது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 94.80 அடியாக உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் ஓரளவு மழை பெய்தால் கூட அணை சதத்தை தொடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதால் பெருங்கால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். கடந்தாண்டு இதே தேதியில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 103 அடியை தொட்டிருந்தது. மணிமுத்தாறு அருவியில் கடந்த இரு தினங்களாக வெள்ளம் பாய்கிறது. வனப்பகுதிகள் நீரால் சூழப்பட்டிருப்பதால், ஆங்காங்கே மரக்கிளைகள் சாய்ந்து கிடக்கின்றன. சாலையில் விழுந்து கிடக்கும் மரக்கிளைகளை வனத்துறையினர் அகற்றி, போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழையால் மணிமுத்தாறு சாலை சகதி காடாக காட்சியளிக்கிறது. மணிமுத்தாறு அருவிக்கு கடந்த சில மாதங்களாகவே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போதைய வெள்ளம் மணிமுத்தாறு பகுதியை புரட்டி போட்டுள்ளது.

Related Stories: