தொடர் கனமழை எதிரொலி: தமிழகம், புதுச்சேரியில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...பல்கலை. தேர்வுகள் ரத்து

சென்னை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மிதமானது   முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணாக அணைகள், ஏரி, குளங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் விடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து   ஓடுகிறது. இதனால், சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால்,    மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதற்கும் பொருந்ததாது. இது ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகனமழை பெய்யும் என்பதற்காக    கூறப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பருவமழை பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன்    முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதற்கிடையே,  சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் சென்னை  மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன்  அறிவித்துள்ளார். இதனை போல, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்பு அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. சுற்றிலும் உள்ள சிறு சிறு ஏரிகளும் நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள்,  மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: