தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மீதான வழக்கு: 7ம் தேதி முதல் விசாரணை என பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: தீவிரவாத குழுக்களுக்கு நிதிதிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஜமாத் உத் தாவா கட்சியின் தலைவன் ஹபீஸ் சயீதிடம், வரும் 7ம் தேதி முதல் விசாரணையை தொடங்க இருப்பதாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மும்பையில் 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர், சுற்றுலா பயணிகள் என மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் உயிருடன் பிடிபட்டான். பின்னர் அவன் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் செயல்படும் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஹபீஸ் சயீத்  பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருந்தார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனை தொடர்ந்து ஹபீஸ் சயீதை கைது செய்ய கோரி சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டது. ஹபீஸ் சயீதை அண்மையில் சர்வதேச நெருக்குதலால் பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சையத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வரும் 7ம் தேதி முதல் ஹபீஸ் சயீத் மீதான வழக்கை விசாரணைக்கு லாகூர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த விசாரணையை தினசரி விசாரணையாக நடத்த அரசு வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: