மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வட மாநிலங்களில் உள்ள சட்டீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மாவோயிஸ்ட் ஆதிக்கம் காணப்படுகிறது. இதன் காரணமாக அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களும் பல கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டன. அண்மையில் சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீசார் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாநில அரசுகளுடன் இணைந்து மாவோயிஸ்ட்களை ஒழித்து கட்ட மத்திய அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக அண்மையில் மாவோயிஸ்ட் ஒழிப்பு படையில் ஏராளமான மத்திய பெண் ரிசர்வ் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு மாவோயிஸ்ட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட கமாண்டோ படை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அம்புஜ்மத் என்ற இடத்தில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக நக்ஸல் தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனை முறியடித்த போலீசார் நடத்திய எதிர்த் தாக்குதலில் இரு நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இறந்தவர்கள் மக்கள் விடுதலைக்கான கொரில்லா ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: