இரணியல் புதிய தபால் நிலையம் திறப்பது எப்போது?: திமுக மறியல் அறிவிப்பு

திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நெய்யூர் தபால் நிலையம்  இரணியல் நீதிமன்ற சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த 100 ஆண்டுகளாக செயல்படும் இக்கட்டிடம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். தற்போது இக்கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து கட்டிடம் புனரமைத்து நவீனவடிவில் புதிய தபால் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இப்பணி நடந்ததால் இதில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் இரணியல் சந்திப்பிலுள்ள வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக இக்கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் சேமிப்பு கணக்கு மற்றும் பணபரிவர்த்தனை போன்றவற்றில் தொடர்புடைய சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். புதிதாக கட்டப்பட்ட தபால் நிலையத்தினை திறக்க ஏன் காலதாமதம் ஆகிறது என்று, தபால் நிலைய அதிகாரியிடம் அப்பகுதி பொதுமக்கள் கேட்டால் சரியான பதில் இல்லை.

இதுகுறித்து மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எஸ்.பி. சந்திரா கூறியதாவது:  கட்டி முடிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இக்கட்டிடத்தின் வளாகத்தில் மரம் செடி கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் இந்த கட்டிடம் மிகவும் பரிதாப நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்படும் தபால் நிலையத்தை, புதிய கட்டிடத்திற்கு உடனே மாற்ற வேண்டும். இல்லையெனில் குருந்தன்கோடு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் புதிய தபால் நிலைய கட்டிடம் முன்பு மறியல்போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: