ஆப்பிள் நிறுவனம் சென்னையில் உற்பத்தியை தொடங்குவது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட அடித்தளம்: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேச்சு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சென்னை ெதாகுதி திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது:  உலக பிரசித்திப் பெற்ற ஆப்பிள் செல்போன் நிறுவனம் தனது உற்பத்தியை வெகு விரைவில் இந்தியாவில், அதாவது சென்னைக்கு அருகே தொடங்க இருக்கிறது என்பது பாராட்டுதலுக்குரிய, மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால், நீங்கள் சற்றே பின்நோக்கி பார்த்திட வேண்டும். கடந்த 2004-09 ஆண்டு நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.  அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்ப துறையில் எடுக்கப்பட்ட நல்ல கொள்கை முடிவுகள்தான் இவற்றிற்கு காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்போது நோக்கியா நிறுவனம் தனது உற்பத்தியை அங்கே தொடங்கியது.

தற்போது அதே நிறுவனத்தின் மூலம் ஆப்பிள் செல்போன் நிறுவனம் தனது உற்பத்தியை வெகுவிரைவில் தொடங்க இருக்கிறது.  இவை அனைத்துமே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் நற்பண்புகள், அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் சாதனைகள். பாக்ஸ்கான், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான தகவல் தொழில்நுட்பத் துறையை சார்ந்த தொழிற்சாலைகள் இந்தியாவில் அமைத்ததற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பாராட்டிட வேண்டும்.  இன்னமும் சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை செய்து கொண்டிருக்கிறது. இதற்காக நாம், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் அவற்றை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: