கடலூர் மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம், உருவச்சிலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

கடலூர்:  சுதந்திர போராட்ட தியாகியும் சமூக நீதிக்காக பாடுபட்டவருமான ராமசாமி படையாட்சியார் மணி மண்டபத் திறப்பு விழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடந்தது. மணி மண்டபம், 8 அடி உயர திருவுருவ  சிலை மற்றும் நூலகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். மண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் எம்.சி சம்பத், சி.வி.சண்முகம் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், வாழும் போதே வரலாறாக வாழ்ந்த ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் திறந்தது  மகிழ்ச்சியளிக்கிறது.  கடலூரில் ரயில் பாதை,  பேருந்து நிலையம், மருத்துவமனை, ஐடிஐ அமைப்பதற்கு தன் நிலத்தை தானமாக வழங்கிய பெருமைக்குரியவர். அவரின் சந்ததியினர்,  தந்தையை விட  உயர்ந்து நின்றார்கள்.  

கடலூரில் பேருந்து நிலையத்திற்கு தகுந்த வழியில்லாததால் சுமார் 20 கோடி மதிப்புள்ள நிலங்களை  தானமாக வழங்கியுள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஓராசிரியர் திட்டத்தை கொண்டுவந்தவர். சமூக நீதியை பாதுகாக்கும் அரசாகவும்  வாக்குறுதியை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாகவும் எங்கள் அரசு உள்ளது.  சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை திறந்து,   பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  பெருமை சேர்த்துள்ளோம். யாரும் கோரிக்கை விடாமல் இதனை  செய்தோம். மாமனிதருக்கு  மணிமண்டபத்தையும் திருவுருவ சிலையையும் திறக்கும்  பாக்கியம் கிடைத்ததற்கு ஜெயலலிதாவுக்கும், ஆண்டவனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள்  கே.பி அன்பழகன், இரா.துரைக்கண்ணு, கே.சி வீரமணி,  ஓ.எஸ் மணியன், சேவூர் ராமச்சந்திரன், மற்றும் தம்பிதுரை, பொன்னையன், கே.பி முனுசாமி, வளர்மதி, பாமக தலைவர் ஜிகே மணி, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, ராமசாமி படையாட்சியார் மகன் எஸ்.எஸ்.ஆர் ராமதாஸ் கலந்து கொண்டனர். கலெக்டர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories: