ஆம்பளையானு ஓபிஎஸ்ச சொல்லல அதிமுகவினரை தான் சொன்னேன்: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

சென்னை: ஆம்பளையா என்று ஓபிஎஸ்சை குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பொதுவாக அதிமுககாரர்களை பற்றி அப்படி சொன்னேன் என தனது சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார். திருச்சியில் நடந்த விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ‘நீங்க எல்லாம் ஆம்பிளையா..’ என ஓபிஎஸ்சிடம் கேட்டதாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையானது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் ஜெயக்குமார் இதுபற்றி கூறுகையில், ‘எந்த ஆம்பளையும் மத்த ஆம்பளைகளை பாத்து நீ ஆம்பளையா..ஆம்பளையானு கேக்க மாட்டான். அதனாலதான் அவர் ஆம்பளையானு நான் கேட்கிறேன்’ என்று பேட்டியளித்தார். கண்டனங்கள் வலுக்கவே ஆடிட்டர் குருமூர்த்தி தனது சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார்.

‘முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து  வேறுபாடுகள் தவிர்த்து. ஓபிஎஸ்சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில்  குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும்.  அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை’ என கூறியுள்ளார்.

Related Stories: