மகாராஷ்டிரா வழக்கு : சிவசேனா, என்சிபி , பாஜக காரசார வாதம் : நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது குறித்து நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : மகாராஷ்டிரா வழக்கில் நாளை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவை நாளை காலை 10.30க்கு ஒத்திவைத்தனர்.

*மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் நவம்பர் 23-ம் தேதி காலையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்று கொண்டனர்.

இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.  

*இந்த மனு நீதிபதிகள் என்வி ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

*அப்போது மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் கடிதம் சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் 54 தேசியவாத காங். எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் என அஜித்பவார் ஆளுநரிடம் அளித்திருந்த கடிதங்களும் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் பின்வருமாறு :

மத்திய அரசு தரப்பில் துஷார் மேத்தா:

ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது; ஆளுநரை விரைவாக வேலை செய்யவோ, அவசரப்படுத்தவோ முடியாது. ஆதரவு கடிதங்கள் குறித்து ஆளுநர் விசாரிக்கத் தேவையில்லை. 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக அஜித் பவார் அளித்த கடிதத்தில் உள்ளது. என்.சி.பியின் தலைவரே நான்தான் என அஜித்பவார் கடிதத்தில் கூறியுள்ளார்.சுயேட்சைகள் மற்றும் அஜித் பவார் அளித்த ஆதரவு கடிதத்தால் ஆளுநர் பட்னாவிஸை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். பல்வேறு கேள்விகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவை

சிவசேனா, காங்கிரஸ் சார்பில் கபில் சிபல் வாதம்:

குடியரசுத் தலைவர் ஆட்சியை அவசர அவசரமாக நீக்க இது என்ன அவசர நிலை பிரகடனமா?அவசர அவசரமாக ஆட்சியமைத்த ஃபட்னாவிஸ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்து விட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது. அஜீத் பவார் அளித்த ஆதரவு கடிதத்தை அரையும், குறையுமாக நம்பி பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததன் வாயிலாக ஜனநாயக மோசடி நடைபெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. பாஜகவிற்கு ஆதரவு வழங்குகிறேன் என கூறினால், அது கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியுமா?.பாஜகவை இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் பாஜக நிரூபிக்கட்டும்.இல்லையெனில் நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம்.

தேசியவாத காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி  :

மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. 54 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக ஒப்புதல் அளித்துள்ளார்களா?. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடுதல் அவகாசம் அளிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். நேற்று பதவியேற்றவர்கள் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க தயங்குவது ஏன்?. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 41 எம்எல்ஏக்கள் அஜித் பவாரை சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி கையொப்பம் இட்டுள்ளனர்.மராட்டிய சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று அல்லது நாளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி :

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு சபாநாயகரை தேர்வு செய்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார். அரசு அமைக்கவில்லை என குற்றம்சாட்டியவர்கள், இப்போது, ஏன் புதிய அரசு பதவியேற்றுள்ளது என கேள்வி எழுப்புகின்றனர். குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரின் நடவடிக்கைகளை எந்த நீதிமன்றமும் கேள்விக்கு உட்படுத்த முடியாது . ஞாயிற்றுக்கிழமையில் இந்த வழக்கை பட்டியலிட்டிருக்கவே கூடாது. கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளிலாவது நிம்மதியாக இருக்க விடுங்கள். அஜித்பவருக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் சிலர் சரத்பாவர் பக்கம் சாய்ந்து விட்டனர். அஜீத் பவார் தலைமையிலான கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி.நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த போதிய கால அவகாசம் தேவை. எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன.உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால் தேவையில்லாத குழப்பங்கள் உருவாகும்.

நீதிபதி கண்ணா:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வர் ஃபட்னாவிஸ்க்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதுதான் கேள்வியே.பெரும்பான்மை இருக்கிறதென்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூப்பிக்கலாமே இது போன்ற வழக்குகளில் 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.மகாராஷ்டிரா வழக்கில் நாளை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

Related Stories: