தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 8.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் உட்பட 7 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு லாரி மற்றும் லோடு ஆட்டோவில் கடத்திய 8.50 டன் ரேஷன் அரிசிைய பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.புன்னைக்காயல் பகுதியில் அவர்கள் கண்காணிப்பில் இருந்தபோது அங்கு வந்த ஒரு லாரி மற்றும் லோடு ஆட்டோவை மடக்கினர். அவற்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிலிருந்த 189 மூட்டைகள்  கொண்ட சுமார் 8.50 டன் எடையிலான ரேஷன் அரிசியையும் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக ரேஷன்அரிசியை பதுக்கி வைத்து, கடத்த முயன்ற  தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த ஜாண்கென்னடி(41), தொம்மை ஆரோக்கியம்(44), பிரையன்ட்நகர்  சுதாகர்(38), காந்திநகர் செல்வம்(42), புதுக்கோட்டை அய்யனார் காலனி  ராஜா(39), கேரள மாநிலம் எரிமேலியை சேர்ந்த டிரைவர்கள் ராகுல்(24), பாதுஷா(23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இக்கும்பல் தூத்துக்குடியில் இருந்து ரேஷன்அரிசியை கேரள மாநிலம் எரிமேலிக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பலை சேர்ந்த, தப்பியோடிய  லோடு ஆட்டோ உரிமையாளரான அன்பு மற்றும் கேரளாவை  சேர்ந்த லாரி உரிமையாளர் நசீர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.கைதான சுதாகர் மீது ஏற்கனவே ரேஷன்அரிசி கடத்திய 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: