கட்சிகளை உடைத்து ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது; உத்தவ் தாக்கரே, சரத்பவார் கூட்டாக பேட்டி

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்தது குறித்து சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக மும்பையில் பேட்டியளித்தனர்.  

சரத்பவார் பேட்டி

காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்க இருந்தோம் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணிக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்கள் உள்ளதாகவும், 170 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கூட்டணியில் உள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்துள்ளார். சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க இருந்ததாகவும், உண்மையான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றும், பாஜகவை எனது உறவினர் அஜித் பவார் ஆதரித்தது கட்சி விரோத செயல் என்று தெரிவித்தார்.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டது காலை 6.30 மணிக்கு தான் எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்த அவர், ஆளுநர் மாளிகையின் செயல்பாடு ஆச்சரியம் அளிப்பதாக சரத்பவார் தெரிவித்துள்ளார். 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பாஜகவை ஆதரிப்பதாகவும், ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவை ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகும் என்று எச்சரித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே பேட்டி

கட்சிகளை உடைத்து ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ள பாஜக முயற்சிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புகார் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் பாஜக அரசியல் விளையாட்டில் ஈடுட்டுள்ளதாகவும், அரியானா, பீகாரிலும் இதே போல சித்து விளையாட்டை பாஜக நடத்தியுள்ளதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார். ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி விட்டதாக பாஜக மீது உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நீடித்திருக்கும் என்று தெரிவித்த உத்தவ் தாக்கரே, மராட்டிய மக்கள் மீது பாஜக அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரவித்தார்.

Related Stories: