சரத்பவாரின் உறவினர் அஜித்பவார் மராட்டிய மக்களின் முதுகில் குத்திவிட்டார் : சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

மும்பை: மராட்டியத்தில் ஆட்சியமைத்ததன் மூலம் பாஜக பட்டப்பகலில் ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் திடீரென பாஜகவை ஆதரிக்க அஜித் பவாரே காரணம் என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். அஜித் பவார் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பயந்துவிட்டதாகவும், சரத்பவாரின் உறவினர் அஜித்பவார் மராட்டிய மக்களின் முதுகில் குத்திவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் அஜித்பவாரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது.

Related Stories: