தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீருவோம்: தென்காசி மாவட்ட தொடக்கவிழாவில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்

தென்காசி: ‘‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீருவோம்’’ என்று தென்காசி மாவட்ட தொடக்கவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தென்காசியில் நேற்று காலை நடந்தது. விழாவில் தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தென்காசி தனி மாவட்டம் கோரிக்கை 33 ஆண்டுகால கோரிக்கையாகும். இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதில் மகிழ்ச்சி. மலைவளம், நீர் வளம், கலை, வரலாறு என அனைத்து விதமான சிறப்புகளும் ஒருங்கே பெற்ற மாவட்டமாக புதிய மாவட்டம் அமைந்துள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம் என மூன்று வகையான நில அமைப்புகளையும் உள்ளடக்கியதாக புதிய மாவட்டம் அமைந்துள்ளது. புதிய மாவட்டத்தில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நெல்லை மாவட்டம் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தை எம்.ஜி.ஆர். பிரித்தார். தற்போது நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை வளம் நிறைந்தது. குற்றால குறவஞ்சி இயற்றிய திரிகூடராசப்ப கவிராயர், ரசிகமணி டி.கே.சி., சுதந்திர போராட்ட வீரர்கள் வாஞ்சிநாதன், சட்டநாத கரையாளர், சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட பூலித்தேவன், ஒண்டிவீரன் ஆகியோர் இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 5 புதிய மாவட்டங்களை உருவாக்கினார். அதன்பிறகு ஜெயலலிதா 7 புதிய மாவட்டங்களை உருவாக்கினார். தற்போது ஒரேநாளில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 17 மாவட்டங்களை அதிமுக அரசுதான் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றவும், நிர்வாக வசதிக்காகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்ற பயண நேரத்தை குறைப்பதற்காகவும், பின்தங்கிய பகுதிகளை வளர்ச்சி அடைய செய்வதற்காக மட்டுமே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கும், புதிய மாவட்டம் உருவாக்கத்துக்கும் சம்பந்தமில்லை. சிலர் உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். எந்த இடையூறு வந்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீருவோம். மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்டோரை மறைமுகமாக தேர்வு செய்வது என்பது 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நடைமுறைதான். 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உள்ளாட்சி மன்ற தொகுதி சீரமைப்பு அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார். விழாவில் அவர், ரூ.28.67 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 45 பணிகள் தொடங்கி வைத்தார். ₹12.16 கோடியில் 6 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ₹19 கோடியே 69 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

ஓ.பன்னீர்செல்வம்: விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: இங்கே புதியதாக தென்காசி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தேனருவி முதல் சிற்றருவி வரை குற்றால அருவிகளை உள்ளடக்கியது தென்காசி. மலர் வளம் கொண்டதாகவும், மூலிகை வளங்களை தன்னோடு சுமந்து பசுமை போர்த்திய வயல் வெளிகளோடு தமிழகத்தின் தங்க கிரீடத்தில் புது வைரமாக தென்காசி மாவட்டம் ஜொலிக்கிறது. தென்காசி மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்படும். தமிழகத்தில் தலை சிறந்த மாவட்டமாக தென்காசி மாவட்டம் திகழும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், நிலோபர் கபில், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், சரோஜா, காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, பாண்டியராஜன், பாஸ்கரன், வளர்மதி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.பி.விஜிலா சத்யானந்த், எம்எல்ஏக்கள், செல்வமோகன்தாஸ் பாண்டியன், முருகையாபாண்டியன், மனோகரன், இன்பத்துரை, நாராயணன், முகமது அபூபக்கர், அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், கலெக்டர்கள் தென்காசி அருண்சுந்தர் தயாளன், நெல்லை ஷில்பா பிரபாகர் சதிஷ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு கடந்த 12 ம் தேதி அரசாணை வெளியிட்டது. ஆக. 17ல் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலரது கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல் தென்காசி மாவட்டத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, தென்காசி மாவட்டம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: