மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு கூட்டணிதான் காரணம்: டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மக்களவை பொதுத் தேர்தலின்போது அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு கூட்டணி தான் முக்கிய காரணமாக அமைந்து விட்டது என டெல்லியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.. டெல்லியில் தனியார் ஓட்டலில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் சார்பில் விருதுகள் வழங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விருதுகளை வழங்கினார். இதில் மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய துறை சார்ந்த அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கியதற்காவும், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கான சிறப்பு விருதும் தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.

இதன்பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளிக்கையில், ‘‘சட்டம் ஒழுங்கை கட்டிக்காப்பதில் தமிழக அரசு திறமையோடு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் மாநிலம் முழுவதும் செய்து கொடுக்கப்பட்டாலும் நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட தவறான பிரசாரத்தால் தான் அதிமுக படுதோல்வி அடைய நேரிட்டது. இதற்கு கூட்டணியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. ஏனெனில் அது கடைசி நிமிடத்தில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சி தரப்பில் ஆரம்பம் முதலில் இருந்தே கூட்டணி என்பது மிகவும் வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருந்தது’’ என்றார்.

Related Stories:

>