நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்க பயன்படுத்திய டிரைசைக்கிள்கள் சென்னை செல்கிறது

*அனாதை மடத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ளது

நாகர்கோவில் :  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் சேரிக்க பயன்படுத்திய டிரைசைக்கிள்கள், இங்கு பயன்படுத்த முடியாத நிலையில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தினமும் 110 டன் குப்பைகளுக்கு மேல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது பயோ மைனிங் முறையில் உரக்கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற டென்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

வலம்புரிவிளை உரக்கிடங்கில் உள்ள குப்பைகளை அங்கிருந்து மாற்றுவதால், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகள் நுண்ணுயிர் உரமாக்கும் கூடங்கள் மூலம் உரமாக்கப்பட்டு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாகர்கோவில் நகர பகுதியில் 11 இடங்களில் இந்த நுண்ணுயிர் உரமாக்கும் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் தற்போது முதற்கட்டமாக 5 நுண்ணுயிர் உரமாக்கும் கூடங்கள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உரமாக்கும் கூடத்திற்கு கொண்டு வரும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்கா குப்பை, மற்றும் பிளாஸ்டிக் என தரம் பிரித்து கொண்டுவரப்படுகிறது. இந்த குப்பைகளை எடுத்துவர தற்போது 64 மினி டெம்போக்கள் மாநகர பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பேட்டரி பைக்குகள், தள்ளுவண்டிகள் மூலமாகவும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு 3 சக்கர சைக்கிள் 262 வந்தது. இதனை கொண்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது. நாகர்கோவில் நகர பகுதி ஏற்றம், இறக்கம் நிறைந்த பகுதி இதனால் இந்த 3 சக்கர சைக்கிளை கொண்டு குப்பை ேசகரிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 3 சக்கர சைக்கிள்கள் தற்போது நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 262 டிரைசைக்கிள் (3 சக்கர சைக்கிள்) நாகர்கோவிலுக்கு வந்தது. இந்த சைக்கிள்களை துப்புரவு பணியாளர்கள் மிதித்து சென்று குப்பைகளை சேகரிக்கவேண்டிய நிலை இருந்தது. நாகர்கோவில் நகர பகுதி ஏற்றம், இறக்கம் நிறைந்த பகுதி. இதனால் இந்த சைக்கிள்களில் குப்பைகள் சேகரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் இந்த சைக்கிளில் குப்பைகள் சேரிக்க ஒரு சைக்கிளுக்கு 3 பணியாளர்கள் தேவையாக இருந்தது.

 நாகர்கோவில் நகர பகுதியில் சமமான பகுதியில் இந்த சைக்கிள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 30 சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன. மற்ற சைக்கிள்கள் தேவையில்லாததால் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சைக்கிள்கள் சென்னை மாநகராட்சி பகுதியில் பயன்படுத்த அனுப்பப்படவுள்ளன. இதற்காக சைக்கிள் வழங்கிய நிறுவனம், ஒதுக்கிப்போட்டுள்ள சைக்கிள்களை சரிசெய்து கொடுத்தவுடன், இந்த சைக்கிள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும். என்றார்.

Related Stories: